Tuesday, July 7, 2009

யாருமல்லாத யாரையோ..

யாருமல்லாத யாரையோ

நாம் எல்லோரும்

பிரதிபலித்து வாழ்ந்துவருவதாக

நேற்றைய கனவில்

நான் நானுமல்லாத

என்னிடம் சொன்னேன்.

பிரியமற்றே....



பிரியமற்றே இருந்திருக்கின்றன

உன் வீட்டு நாய்க்குட்டியும்

என் வீட்டு நாய்க்குட்டியும்

நாம் பிரியப்போவதறிந்து...

Saturday, July 4, 2009

இன்னுமொரு...


இன்னுமொரு
சாதாரண பொழுதென கழிகின்றன
உன் கணங்கள்.
நானோ
சலனமூட்டும் உன்னுடனான
சந்திப்புகளை தவிர்க்கும்
சாதுர்யமின்றி தவித்தொழிகிறேன்.

Friday, July 3, 2009

பொதுவாக...

பொதுவாக
முகம் தெரியாத மனிதர்களே
நாம் போகவேண்டிய
இடத்திற்கான வழி சொல்கிறார்கள்.

வார்த்தைகளற்ற...

வார்த்தைகளற்ற உன் மௌனங்கள்
சொல்லிக்கொண்டிருக்கின்றன
உன் காதலை..
ஓயாமல் பேசினாலும்
உணர்த்த முடிவதில்லை என்னால்...

Saturday, June 20, 2009

தமிழகமே!!

உன் நாட்குறிப்பேடுகளிலோ

உன்னை ஞாபகமூட்டும் சாதனங்களிலோ

குறிப்பேற்றிக் கொள்

'ஈழம்' என்ற வார்த்தையை..

சில நாட்களில் நீங்கள்

மறந்து விடக்கூடும்.

கூடவே பழக்கப்படுத்திக்கொள்

" தமிழனா நீ! இவனைக் கொல்லுங்கள் "

என்ற வார்த்தைகளை..

எதிர் காலத்தில் பயன் படக்கூடும்.

முல்லைத்தீவு.

ஒவ்வொரு ஈழத்தமிழனின்

ஒவ்வொரு அதிகாலைக் கேள்விகள்

இவ்வாறு இருக்குமோ?

நான் உயிருடன் இருக்கிறேனா?

நேற்று என்னுடன் இருந்தவர்கள்

இன்றும் இருக்கிறார்களா??

என்ன தவறு செய்தோம்

தமிழனாய் பிறந்தது தவிர...

தலைவன் இருக்கிறான்


நீ அறிந்தோ அறியாமலோ

உன் ஆரம்பமும் முடிவும்

சுபாஷ் சந்திரபோசையும்

சே குவேராவையும்

பின்பற்றியே வந்துள்ளது.

நீ அடைந்தது வீர மரணமெனில்

உனது இரத்தத் துளிகளில்.

புது விருச்சங்கள் முளைக்கும்.

புது தமிழ் உலகம் பிறக்கும்.

நீ இருப்பாயெனில்

அது உன் தலைமையில் நடக்கும்.

அதுவரை

உன் வரலாறு

மர்மமாகவே தொடரட்டும்.

வலி வலியாகவே..



நீ விட்டுச்சென்ற வலி போக்கும்

முயற்சிகள் யாவும்

வலியின் வீரியத்தைக் கூட்டுகின்றன.

கறை துடைக்கும்

குழந்தையின்

கறையான கைகளைப் போல..

Friday, June 19, 2009

நீ இருந்தவரை புரியவில்லை

உனது அருகாமை உணர்த்தாத

ஆயிரம் அர்த்தங்களை

உன்

ஒரு நாள் பிரிவு

உணர்த்தி விட்டது.