Monday, October 3, 2011

கனவுகள்

கனவுகள் எப்போதுமே நமக்கு பிடித்தமானவையாக இருக்கின்றன,நாம்

முழுக்க ,முழுக்க நாமாக இருப்பதாலேயே .

அவை தொடர்பற்ற காட்சிகளால் கோர்க்கப்பட்டுள்ளன.

நமது வெளிபடுத்தாத ஆசைகளையும்,உண்மை முகத்தையும் ,ஆழ் மன

ஆதங்ககளையும் நமது அனுமதியின்றி திரையிடுகின்றன.

சில கனவுகள் முடிவும்,தொடக்கமும் கொண்ட திரைப்படம் போல

ஆச்சர்யமூட்டுகின்றன.

நாம் பிரிந்த,இழந்த மனிதர்களுடன் மிகச் சாதாரணமாக உரையாட வைக்கின்றன.

நாம் பார்த்தேயிராத ,அனுபவம் கொள்ளாத நிகழ்வுகளும் ,சம்பவங்களும்,இடங்களும்

சம்பந்தமற்ற மனிதர்களுடன் நிகழ்த்தப் படும் கனவுகள் அறிவியலுக்கு அப்பாற்ப்பட்டது .

சில நிகழ்வுகள் நாம் ஏற்கனவே கனவில் கண்டதாய் உணர்வது எவரொருவரும்

மறுக்க இயலாதது.

நம்மை மகிழ்விக்கும் கனவுகள் சட்டென கலைத்து விடும்பொழுது ,

அதிகமாய் கோபம் கொள்கிறோம்.மீண்டும் தொடர முயற்சி கொள்கிறோம்.

நம்மை வருத்தம் கொள்ள செய்யும்,நாம் தோல்வியுற்ற கனவுகள் வெறும்

கனவுகளே என்று உணரும்பொழுது அடையும் ஆனந்தம் அளவிலாதது.

-மதுசூதனன்

Tuesday, September 27, 2011

நிலா பொழியும் நேரத்தில்

நிலா பொழியும் நேரத்தில்
நீ வந்து நின்றாய் ..
இரவு பாடகனாய்
நான் மாறிப் போனேன் .
வசந்தத்தின் இருப்பை
உன் வருகை அறிவிக்க
நான் மரமாகிப் போனேன் .
நீ வரைந்த கோடுகள்
வானவில்லாய் மாற
தூரிகையாய்
நான் மாறிப் போனேன்

Tuesday, September 6, 2011

கனவில்

கனவில் தொலைத்ததாய்
கண்டெடுத்து வந்து கொடுத்தாய்
நம் காதலை..
நான் நித்திரை கொண்டே நெடுநாட்களானதென்பதை
எப்படி சொல்வது உன்னிடம்?

Wednesday, June 15, 2011

நீ

நீயோ
தொலைந்தே போன
ஞாபகக்குவியல்களிலிருந்து
தேடித் தருகிறாய் நம் காதலை ...
நானோ
நிகழ்கால நினைவுகளற்ற
நித்திரையிலிருக்கிறேன்.

Tuesday, June 14, 2011

நான் நானாக...

நான் நானாக இருப்பதின்
சங்கடங்களை
நான் மட்டுமே அறிவேன் ...

உனது அழுகை..

உனது
அழுகைக்கான அர்த்தங்கள் புரிவதில்லை
இருந்தும்
தொடர்ச்சியான
தீர்வுக்கான தேடலில் நான்....

Friday, July 2, 2010

வயதும் வருத்தமும்

சிறுவர்கள்
பெரியவர்களாக ஆசைப்படுவதும்

மீசை வரைந்து
மகிழ்ச்சி கொள்வதும்,

பெரியவர்கள்
சிறியவர்களாய் நினைத்துக் கொள்வதும்

மீசை மழித்து
முகம் பார்ப்பதும்,

வயதின் வருத்தம்
வாடிக்கையே எல்லாருக்கும் எப்போதும்.

நீ,கவிதை ,காரணம்

எங்கேனும் ஒளிந்திருக்கும்

என்னோடு நீ இல்லாமல்போன காரணங்கள்.

அவை சொல்லும்

உன்னைப் பற்றிய கவிதைகளுக்கான அர்த்தங்களை....

Saturday, September 5, 2009

தேவதைகள்

தேவதைகள்
சொல்லிவைத்து வருவதில்லையென்றாலும்..
சட்டென வந்து நிற்பதும்,
வரங்கள் தந்து மகிழ்விப்பதும்
தற்செயலானதல்ல..

Saturday, July 18, 2009

நான்


நீ நீயாக இல்லாத
நாட்களில் மட்டுமே
நான் நானாக இருக்கிறேன்..

Saturday, July 11, 2009

உன்..

உன் வெறுமை
ஏற்படுத்தும் கோபங்கள்
சற்றென கொல்லப்படுகின்றன.

சூழ்நிலைக் கூச்சல்கள்
குற்றமாய்த் தெரியவில்லை.

தனிமையின் அதிர்வுகள்
ஏனோ அந்நியப்படுத்துவதில்லை.

இன்னும் இருக்கின்றன
நீ விட்டுச்சென்ற
உன் நிமிடங்கள்.

Wednesday, July 8, 2009

உன் நினைவுகளற்ற....

உன் நினைவுகளற்ற இரவுகளையும்
நீ வந்து போகாத கனவுகளையும்
வெறிச்சோடிப்போன
அதிகாலை வானம்
நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது...

நேற்றிரவு...


நேற்றிரவு
நண்பனொருவன்
சொல்லிச்சென்றான்
நீ நல்லவனாக இருப்பதே
பெரும் பிரச்சனையென்று...

Tuesday, July 7, 2009

யாருமல்லாத யாரையோ..

யாருமல்லாத யாரையோ

நாம் எல்லோரும்

பிரதிபலித்து வாழ்ந்துவருவதாக

நேற்றைய கனவில்

நான் நானுமல்லாத

என்னிடம் சொன்னேன்.

பிரியமற்றே....



பிரியமற்றே இருந்திருக்கின்றன

உன் வீட்டு நாய்க்குட்டியும்

என் வீட்டு நாய்க்குட்டியும்

நாம் பிரியப்போவதறிந்து...

Saturday, July 4, 2009

இன்னுமொரு...


இன்னுமொரு
சாதாரண பொழுதென கழிகின்றன
உன் கணங்கள்.
நானோ
சலனமூட்டும் உன்னுடனான
சந்திப்புகளை தவிர்க்கும்
சாதுர்யமின்றி தவித்தொழிகிறேன்.

Friday, July 3, 2009

பொதுவாக...

பொதுவாக
முகம் தெரியாத மனிதர்களே
நாம் போகவேண்டிய
இடத்திற்கான வழி சொல்கிறார்கள்.

வார்த்தைகளற்ற...

வார்த்தைகளற்ற உன் மௌனங்கள்
சொல்லிக்கொண்டிருக்கின்றன
உன் காதலை..
ஓயாமல் பேசினாலும்
உணர்த்த முடிவதில்லை என்னால்...