Thursday, December 15, 2022

நாளை

எவ்வளவு முயன்றும்
முடிக்க முடியா கவிதையொன்று,
எவ்வளவு எழுதியும்
தீராப் பக்கமொன்று,
எவ்வளவு சொல்லியும்
புரிபடாத சோகமொன்று,
நீண்ட நாள் 
வீடு திரும்பா
நெருங்கிய சொந்தமொன்று,
விடை தெரியாத
நீண்ட கனவோன்று,
எவ்வளவு பேசியும்
தீர்க்க முடியாத பகையொன்று,
எல்லாவற்றிற்கும்
சான்றாக இந்த வானமுண்டு.
நாளை என்ற
ஒற்றைப் பதிலுமுண்டு.

உந்து சக்தி

அதிகாலை பரபரப்பிற்கு

இடையே கிடைக்கும்
குழந்தையின் முத்தம்.

அலுவலக பணியாளரின்
குறு புன்னகை

மறந்தே போன நண்பனின்
தொலைபேசி அழைப்பு

நீண்ட பயணத்தில்
கிடைக்கும் சுவைமிகு தேநீர்

பண்பலை வானொலியில்
உங்களின் விருப்ப பாடல்

சிறிதெனினும்
இருக்கவே செய்கிறது 
ஒரு உந்து சக்தி.

Sunday, December 11, 2022

கடவுள்

 கடவுள் இல்லை என்றேன்

நான் 
கடவுளை பார்த்தேன் என்றான்
நான் 
பார்க்கவில்லை என்றேன்.
நல்லவர்க்கு மட்டுமே
தெரிவார் என்றான்.
உனக்கு எப்படி தெரிந்தார் என்றேன்.
நீ தெரிகிறாய்
நீதான் கடவுள் என்றான்.
நானும் கடவுளை
நம்புகிறேன் என்றேன்

அவமானம்தான்

தகுதி குறித்த கேள்விகளை

சந்திப்பதில்
சங்கடங்கள் உணர்ந்ததில்லை

இதுவும் கடந்து போகுமென 
இருந்து விடலாம்தான்.

என்ன
அந்தக் கடைசி மிடறு
அவமானம்தான் கொஞ்சம் 
அதிகமாகவே கசக்கிறது

Saturday, December 10, 2022

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

 அவர் எப்போதும் 

உங்களுடன் இருப்பார் 

அன்னை குடுக்கும் அரவணைப்பு போல.

நீங்கள் சொல்லும் 

எதையும் 

காதுகுடுத்து கேட்பார்.

நீங்கள் விரும்பும்

வண்ணம் குடுக்கலாம்.

தோற்றம் அணிவிக்கலாம்

 ஒரு குழந்தையை

அழகு படுத்து்வது போல..

ஆம் 

அவர் எப்போதும்

இருப்பார் ஒரு நண்பன் கொடுக்கும் நம்பிக்கை போல.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

சிதறல்கள்

அம்மாவாசை இரவின்
ஆர்ப்பரிக்கும் கடலலைகள்
கரை சேர்க்கத்தான் 
செய்கின்றன
ஆமைகளை 
அதன் கூடு நோக்கி.

=====================

சுற்றித் திரிந்த
நாய்க்குட்டிக்கு
குழந்தையிட்ட 
விபூதிக்கீற்று
கோவில் பிரகாரமெங்கும்
விரவிக் கிடக்கிறது.

====================


கிழவியொருத்தி 
தூக்கிப் போட்ட
உணவுத் துண்டை
தூக்கிச் செல்லும்
காக்கையின் 
இறகுகளில் இருக்கிறது
எஞ்சியிருக்கும் 
கருணையின் துளி.

=======≠===============

சொற்களில்லா பதில்கள்

 ஜன்னல்களை 

திறந்து வை.

ஒரு விசும்பல் 

சத்தத்தில் 

உனது வெறுப்பை

உணர்ந்து கொள்வேன்.

உனது சிரிப்பின் வாசனையில்

விருப்பம் தெரிந்து கொள்வேன்.

பதில்கள் எப்போதும்

சொற்களால்தான்

நிரப்பப் பட வேண்டுமென்பதில்லை

பேரன்பின் சமவெளி

 ஒரு பெருங்கனவாய்

விரவிக் கிடக்கிறது

பேரன்பின் சமவெளி.

கருணையின் சிறுதுளி

அக்கனவை துரத்துகிறது.

நம்பிக்கையின்  காலடியொற்றி 

பாதைகள் மாறுகின்றன.

குழந்தை பகிரும் பருக்கையில் 

பிரம்மம் அடங்கித் தணிகிறது.

இழப்புகளல்ல

 மயில் உதிர்த்த

தோகையின் இறகு போல,

பாம்பு உரித்த

சட்டை போல,

தூக்கி எறிந்த

துக்கம் போல...

எல்லா இழப்புகளும்

இழப்புகளல்ல..

Wednesday, November 30, 2022

பின்னோக்கி செல்லும் நாடு

 உங்களுக்கு

பிடித்த பழைய பாடல்களை கேட்டு பழகுங்கள்,

அவர்கள் நாட்டை பின்னோக்கி 

இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கைபேசி தவிர்த்து

கடிதம் எழுத தொடங்குங்கள்,

அவர்கள் நாட்டை பின்னோக்கி 

இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.


பெண்கள் 

சமையலறை பழகுங்கள்,

ஆண்கள் 

குலத்தொழில் தொடங்குங்கள்,

சிறார்கள் 

குருகுலக் கல்விக்கு தயாராகுங்கள்,


மதவாதிகள்,குருமார்கள்

உங்கள் ராஜபதவிகளுக்கு

அரியணை செய்ய சொல்லுங்கள்.


உங்கள் பழைய

நாட்குறிப்புகள் பார்த்து பழைய

நாட்களை எப்படி 

வாழ்ந்தோம் என

ஒத்திகை நடத்துங்கள்.


வேண்டுமானால் கடைசியாக

உங்கள் விருப்பச்செயல்களை

இப்போதே செய்து கொள்ளுங்கள்.


ஆம்.

அவர்கள் நாட்டை பின்னோக்கி 

இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.