Friday, May 4, 2012

மனமொழி

மனமொழி
------------------------------


ஆங்கிலம் இந்தி
என பிற மொழிகளை
என் மகளுக்கு
கற்பிக்கச் சொல்லி
அடம் பிடிக்கிறாள்
என் மனைவி.
மொழிகளை படிப்பதைக்
காட்டிலும்
மனங்களை படிப்பதே
அவசியம் என
எப்படி சொல்வது அவளிடம்?

குழந்தைகளின் உலகம்

குழந்தைகளின் உலகம்
------------------------------
நாம் செய்வதையெல்லாம்
செய்து காட்டும் கணத்திலிருந்து
தொடங்கி விடுகிறது,
அவளது எதிர்காலம்
குறித்த அச்சம்.

---------------------------------------------------------------------

குழந்தைகளின் உலகத்திற்கான
நுழைவாயிலில் அறிவிப்புப்பலகை
"பொய் பேசுபவர்களுக்கு இடமில்லை"
அதனாலோ என்னவோ
இன்னும் அது
அவர்களின் உலகமாய் இருக்கிறது.

Thursday, May 3, 2012

நம்பிக்கையின்மை

இரவுகளில்
லிப்ட் கேட்பவரை
தவிர்த்துச் செல்லும்போது
கோபம் கொள்கிறது மனது
நம்பிக்கையின்மையை 
கற்றுக்கொடுத்த 
இந்தச்சமூகத்தை நினைத்து..

கதைகள்

தூக்கம் வர

கதை சொல்ல சொல்லி

நச்சரிக்கிறாள் என் மகள்.

உண்மை தவிர்த்த

வெறும் கட்டு கதைகளாலேயே

இவளது எதிர்கால உலகம்

நிரம்பியுள்ளது என்பதறியாமல்.

Thursday, March 22, 2012

மதம்பிடித்த மானிடம்

ஆங்காங்கே ஒளிந்து கொள்கிறோம்
தன்னையே தனக்குள் வைத்து .
வீரனும் கோழையும்
அடித்துக் கொள்கிறார்கள் நமக்குள்.
உண்மை என்றொன்று
இல்லையென்பதே உண்மை.
வேறென்ன செய்ய
மதம்பிடித்த மானிடப் பிறவியை
பழிப்பதன்றி?
-மதுசூதனன்

Thursday, February 9, 2012

வார்த்தைகளற்ற வாஞ்சைகள்

இன்னும் அடைந்தே கிடக்கின்றன

அளப்பறியா அன்பும் பாசமும்.

உறுதிப்படுத்த உதாரணங்களே

இங்கே தேவைப்படுகின்றன.

வார்த்தைகளற்ற வாஞ்சைகளை

உணரும் மனங்கள்

மரித்து வருகின்றன

என்பதே உண்மை.

Monday, December 5, 2011

ஒன்றுக்கொன்று தொடர்பில்லா
முற்றுப்புள்ளிகளால்
தொடர்ந்துக் கொண்டிருக்கிறது
முடிவுறா வாழ்க்கை .
நியாயங்கள் கற்பிப்பதிலும் ,
நீ நான் என்பதிலுமான போட்டியிலும்
நிலையற்றதொரு வாழ்க்கை.
கட்டாயமாக்கப்பட்ட பந்தயத்தில்

Monday, October 3, 2011

கனவுகள்

கனவுகள் எப்போதுமே நமக்கு பிடித்தமானவையாக இருக்கின்றன,நாம்

முழுக்க ,முழுக்க நாமாக இருப்பதாலேயே .

அவை தொடர்பற்ற காட்சிகளால் கோர்க்கப்பட்டுள்ளன.

நமது வெளிபடுத்தாத ஆசைகளையும்,உண்மை முகத்தையும் ,ஆழ் மன

ஆதங்ககளையும் நமது அனுமதியின்றி திரையிடுகின்றன.

சில கனவுகள் முடிவும்,தொடக்கமும் கொண்ட திரைப்படம் போல

ஆச்சர்யமூட்டுகின்றன.

நாம் பிரிந்த,இழந்த மனிதர்களுடன் மிகச் சாதாரணமாக உரையாட வைக்கின்றன.

நாம் பார்த்தேயிராத ,அனுபவம் கொள்ளாத நிகழ்வுகளும் ,சம்பவங்களும்,இடங்களும்

சம்பந்தமற்ற மனிதர்களுடன் நிகழ்த்தப் படும் கனவுகள் அறிவியலுக்கு அப்பாற்ப்பட்டது .

சில நிகழ்வுகள் நாம் ஏற்கனவே கனவில் கண்டதாய் உணர்வது எவரொருவரும்

மறுக்க இயலாதது.

நம்மை மகிழ்விக்கும் கனவுகள் சட்டென கலைத்து விடும்பொழுது ,

அதிகமாய் கோபம் கொள்கிறோம்.மீண்டும் தொடர முயற்சி கொள்கிறோம்.

நம்மை வருத்தம் கொள்ள செய்யும்,நாம் தோல்வியுற்ற கனவுகள் வெறும்

கனவுகளே என்று உணரும்பொழுது அடையும் ஆனந்தம் அளவிலாதது.

-மதுசூதனன்

Tuesday, September 27, 2011

நிலா பொழியும் நேரத்தில்

நிலா பொழியும் நேரத்தில்
நீ வந்து நின்றாய் ..
இரவு பாடகனாய்
நான் மாறிப் போனேன் .
வசந்தத்தின் இருப்பை
உன் வருகை அறிவிக்க
நான் மரமாகிப் போனேன் .
நீ வரைந்த கோடுகள்
வானவில்லாய் மாற
தூரிகையாய்
நான் மாறிப் போனேன்

Tuesday, September 6, 2011

கனவில்

கனவில் தொலைத்ததாய்
கண்டெடுத்து வந்து கொடுத்தாய்
நம் காதலை..
நான் நித்திரை கொண்டே நெடுநாட்களானதென்பதை
எப்படி சொல்வது உன்னிடம்?