Wednesday, November 30, 2022

பின்னோக்கி செல்லும் நாடு

 உங்களுக்கு

பிடித்த பழைய பாடல்களை கேட்டு பழகுங்கள்,

அவர்கள் நாட்டை பின்னோக்கி 

இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கைபேசி தவிர்த்து

கடிதம் எழுத தொடங்குங்கள்,

அவர்கள் நாட்டை பின்னோக்கி 

இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.


பெண்கள் 

சமையலறை பழகுங்கள்,

ஆண்கள் 

குலத்தொழில் தொடங்குங்கள்,

சிறார்கள் 

குருகுலக் கல்விக்கு தயாராகுங்கள்,


மதவாதிகள்,குருமார்கள்

உங்கள் ராஜபதவிகளுக்கு

அரியணை செய்ய சொல்லுங்கள்.


உங்கள் பழைய

நாட்குறிப்புகள் பார்த்து பழைய

நாட்களை எப்படி 

வாழ்ந்தோம் என

ஒத்திகை நடத்துங்கள்.


வேண்டுமானால் கடைசியாக

உங்கள் விருப்பச்செயல்களை

இப்போதே செய்து கொள்ளுங்கள்.


ஆம்.

அவர்கள் நாட்டை பின்னோக்கி 

இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சமநிலை?

 நீங்கள் 

முடிவில்லா உலகத்தில்

முற்றுப் புள்ளிகள் தேடுகிறீர்கள்.

எப்பொழுதும் கண்டிராத

சமவெளியில்

சலனங்கள் இருக்கலாம்

சில சமயங்களில்..

சமநிலை என்பது மனநிலையன்றியே

வேறொன்றும் இல்லை.

சரித்திரம் சாதாரணம்

என்பது வெறும்

சல்லிக்காசில் தெரிந்து விடும்.

இங்கே

நீயும் நானும்

ஒன்று என்பதில்

ஒன்றுமேயில்லை..

கோவிந்தன்

எந்த அம்மன் கோவில்

திருவிழாவும் 

தவற விடுவதேயில்லை

லங்கர் உருட்டும்

கோவிந்தன்.


எப்போதும் போல்

போலீஸ் வருவதும்

அவன்

பதறிப் பதுங்குவதும்

வழக்கமான ஒன்று.


அவன் பிடிபட்ட

பிறிதொரு நாளில்

போலீஸ் வீசிச் சென்ற

அவனது மஞ்சள் பையில்

துருத்திக் கொண்டிருந்த

குழந்தைக்கான

கரடி பொம்மையை

பார்த்ததிலிருந்து,

ஏமாற்றுக்காரனுக்கு

ஏற்புடையதாகவே இல்லை

எப்படிப் பார்த்தாலும்

அவனது முகம்.

காலம்

 கடிகார முள்ளை

சிறிது பின்னோக்கி நகர்த்திவிட்டு

காலத்தின் பின்னே 

ஒளிந்து கொள்கிறேன்.

அம்மா

தீபாவளி தவறாமல்

எல்லோருக்கும் மருதாணியிட்டு

தானும் மருதாணிக் கைகளோடு

வலம் வருவாள் அம்மா.

வீடு இன்றும்

மத்தாப்பூ வாசம் மறந்து

மருதாணி வாசத்திற்காக

காத்துக் கிடக்கிறது,

கொய்யாக் கிளி

கொய்யா பழுக்க

காத்திருக்கும் கிளியொன்று .

கூடவே குழந்தையொன்று,

அது

கொத்தி விழும்

கொய்யாவிற்காக..

கிரகணம்

 கிரகண நாட்களில்

விரைந்து வீடு திரும்புகிறார்கள்.

கிரகணநேரம் 

உணவு உண்ணக்கூடாது,

வெளியே செல்லக்கூடாது,

வானம் பார்க்கக்கூடாது,

ஊர்க்கட்டுப்பாடு

கோவில் நடையும்

சாத்தப்படுகிறது.

அம்மன்தான் பாவம்

திகைத்துப் பார்க்கிறாள்!

முகவரியற்றவன்

 நீங்கள் நினைப்பதுபோல்

முகவரியற்றவனின்

ஒருநாள் ஒன்றும்

அவ்வளவு கடினமாக

இருப்பதில்லை.

அவன் அவனாகவே 

சுற்றித் திரிகிறான்.

உங்களைப் போல அல்ல..

பயணம்

பார்வையிழந்த சிறுமியொருத்தி

பேருந்துப் பயணத்தில்

பக்கத்து இருக்கையில்,

வழிநெடுகக் கிடைத்த

காட்சிகளின் கதை சொன்னேன்.

கொஞ்சம் கொஞ்சமாக

அவள் கண்களின் வழியே

காணத் தொடங்கினேன் இவ்வுலகம்.

வாழ்ந்து கெட்டவனின் வீடு

 சாலையோரம் யாருமற்ற

சிதிலமடைந்த ஜமீன் பங்களா.

உடல் முழுக்க நகைகளோடு

அமர்ந்திருப்பாள் 

 முன்திண்ணையில் ஜமீன் மனைவி,

பட்டாடையின்றி ஜமீனின்

புறப்பாடு இருந்ததில்லை,

விழாக்காலங்களில்

எல்லோருக்கும் விருந்து நிச்சயம்,

வாழ்ந்து கெட்டவனின் வீடு 

கடந்த காலத்தை எப்போதும்

சொல்லிக்கொண்டே இருக்கிறது.

காஃபி

 ஒரு நல்ல காஃபி

நல்ல தீர்வு கொடுக்கும்

என படித்ததாக ஞாபகம்.

இப்போதெல்லாம்

எல்லா சந்திப்புகளிலும்

நல்ல காஃபி இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன்.

குறைந்த பட்சம்

நல்ல காஃபி அருந்திய

திருப்தியோடாவது

திரும்பலாம் இல்லையா?

கடவுள்

 நேற்று

கடவுள் கனவில் வந்தார்.

நீங்கள் கனவில் மட்டுமே

வருமாறு வரம் கேட்டேன்.

நிதர்சனம் உங்களால்

தாங்கவே முடியாதென்று.

இயல்பே இயற்கை

 எப்போதும் போலவே 
 இருந்து விடு. 
 நீண்ட வெறுப்பின் இடையே
 சிறு புன்னகை 
 அந்நியமாகவே படுகிறது

இழப்பு

 மயில் உதிர்த்த 
 தோகையொன்று.. 
 பாம்பு 
 உரித்த சட்டையொன்று..
 தூக்கி எறிந்த துக்கம் போல... 
 எல்லா இழப்புகளும்
 இழப்புகளல்ல..

உனது இருப்பு

இன்னுமா இருக்கிறாய் 
நீ 
இல்லையென்றால் தான் 
இப்போதெல்லாம் வருகிறேன். 
உன் 
இருப்பின் இம்சை 
பொறுக்க முடிவதேயில்லை

பேரன்பின் சமவெளி.

ஒரு 
பெருங்கனவாய் விரவிக் கிடக்கிறது 
பேரன்பின் சமவெளி. 
கருணையின் சிறுதுளி 
அக்கனவை துரத்துகிறது. 
நம்பிக்கையின் காலடியொற்றி 
பாதைகள் மாறுகின்றன. 
குழந்தை பகிரும் பருக்கையில் 
பிரம்மம் அடங்கித் தணிகிறது.

மழை நின்ற போதிலும்

மழை நின்ற போதிலும் 
பனித்துளிகள் பார்க்கிறேன் 
ஒவ்வொரு துளியிலும் 
உன் பிம்பம் காண்கிறேன் 
 
நீ வந்து சென்ற நாள் 
மேகங்கள் கூட்டமே 
நீயில்லா நாளிலே 
வானமது வாட்டமே 


தூறல் விழும் தூரங்கள் 
நீயிருந்தால் அருகிலே 
வந்த செய்தி என்றுமே 
மழை வந்து சொல்லுமே

 
நான் காணா உலகங்கள் 
உன் உள்ளக்கிடக்கிலே 
எப்போதும் இருந்திடு 
என் இருக்கை அருகிலே 

மழை நின்ற போதிலும் 
பனித்துளிகள் பார்க்கிறேன் 
ஒவ்வொரு துளியிலும் 
உன் பிம்பம் காண்கிறேன்

உனது வருகை

உனது வருகை 
எல்லாம் தெரிந்து கொள்வேன் 
முன்னறிவிப்பு தேவையில்லை. 
 முகக்குறிப்பில் 
புரிந்து கொள்வேன் 
வந்து நிற்கும் காரணத்தை.. 
இருந்தாலும் 
தெரியாதது போலவே 
 கேட்டு வைப்பேன்.

விளக்குத்திரி

விளக்குத் திரி
இறக்கும் முன்னே
விரசா நீ போனதென்ன?
விளக்கணைச்சு வச்சுடுவேன்
வெசெனத்தீ அணைப்பதெங்க?

முன்னமே சொல்லிருந்தா
கூடவே வந்திருப்பேன்
வம்சப்புள்ள வழிமறிக்க
என்ன செய்ய என்னுசிரே ?

முக்காவாசி வாழ்ந்த பின்னே
கால்வாசி கடன் குடுத்த
கடங்காரி காணலியே

நின்னா பூப்பூக்கும்
நடந்தா நீர் பாயும்.
நீ நடக்கா நடைபாதை
வறண்டு போன வாய்க்காலா
வந்து நிக்கும் கோலமென்ன ?

மாயக்கண்ணாடிகள்

மனம் காட்டும் 
மாயக்கண்ணாடிகள் 
வழக்கொழிந்து விட்டன. 
ரசம் மாற்றும் 
ரசாயனம் தெரிந்து கொண்டு 
விட்டார்கள் மனிதர்கள்.

பதிலோன்று

ஜன்னல்களை திறந்து வை.
ஒரு விசும்பல் சத்தத்தில் 
உனது வெறுப்பை 
உணர்ந்து கொள்வேன். 
உனது சிரிப்பின் வாசனையில் 
விருப்பம் தெரிந்து கொள்வேன். 
பதில்கள் எப்போதும் சொற்களால்தான் 
நிரப்பப்பட வேண்டுமென்பதில்லை.

வெக்கை

உப்பள வெண்மையாய் 
வெளுத்துக்கிடக்கிறது வானம். 
ஒற்றைக்காகம் மரக்கிளையில் 
ஒதுங்கி நிற்கிறது. 
மழையின் சமிக்ஞை 
புரிந்து மனதின் 
வெக்கைத்தீர்க்க தயாராகிறேன்.

காலம்

காலம் தீராதது. 
நீதான் 
உனது நாட்களை 
தின்று தீர்க்கிறாய்!

குறுஞ்செய்தியோன்று

பால்வெளியில் 
 நீ அனுப்பிய 
குறுஞ்செய்தியோன்று 
அலைவரிசை தவறி 
அடுத்த கிரகம் சென்றுவிட்டதாம். 
கிரகவாசிகள் 
எளிதாக புரிந்துகொண்டனர், 
இது 
அன்பின் மொழியென்று. 
 நம்மவர்கள்தான் 
அதில் சாதிக் குறியீடுகள் 
 கண்டுள்ளதாகவும், 
பொருளாதார மதிப்பை 
தரம் பார்த்ததாகவும், 
மதக் கோட்பாடுகளை 
 மதிப்பிட்டுள்ளதாகவும் 
 பிதற்றித் திரிகிறார்கள். 

அந்தக் குறுஞ்செய்தி 
அந்தக் கிரகத்திலாவது 
அதன் மதிப்போடு 
 வாழ்ந்துகொள்ளட்டும்.

கொஞ்ச நேரம் இரு.

நித்தமொரு வானம், 
விருப்பமான 
வண்ணங்களில் வானவில் 
 அனுக்கமான அந்திமழைச்சாரல் .., 
 இதமான இளவேனில், 
மதிமயக்கும் மாலைத்தென்றல். 
கொஞ்ச நேரம் இரு. 
உன் இருப்பால் 
மட்டுமே சாத்தியம் இவையெல்லாம். 

நம் நினைவுகளை 
ஞாபக அடுக்குகளிலிருந்து 
தேடித் தருகிறாய், 
நானோ 
நிகழ்கால 
நிதர்சனமறியா 
நித்திரையில் இருக்கிறேன். 
கொஞ்ச நேரம் இரு. 
உன்னால் மட்டுமே முடியும் 
என்னை துயிலெழுப்பாமல். 

உனக்கு வேண்டுமானால் 
தெரியாமல் இருக்கலாம். 
 உனக்கான அன்பை 
ஒரு கோப்பையில் 
சேகரித்துக்கொண்டுதான் 
இருக்கிறேன். 
மனமுடைந்த நாட்களில் 
மட்டும் கொஞ்சம் 
திருடிக் கொள்கிறேன். 
கொஞ்ச நேரம் இரு. 
மீண்டும் நிரப்பி விட்டு 
சொல்லியனுப்புகிறேன். 

இன்னுமொரு சாதாரண 
பொழுதென கழிகின்றன 
உன் கணங்கள். 
 நானோ 
 சலனமூட்டும் உன்னுடனான 
 சந்திப்புகளை தவிர்க்கும் 
சாதுர்யமின்றி தவித்தொழிகிறேன். 
 கொஞ்ச நேரம் இரு. 
பேசிப் பழகிக்கொள்கிறேன் உன்னோடு .

மன்னிப்பு

ஒரு மன்னிப்பு 
என்பது ஒருவருடன் 
நின்று போவதில்லை. 
அது சட்டமாக்கப் படலாம்,
ஆட்சி மாறலாம். 
ஒருவன் தனது சுயமிழக்கலாம். 
அவ்வளவு எளிதாக 
இனிமேல் 
மன்னிப்பு கேட்டுவிடாதீர்கள்!

நிராகரிப்பின் வலி,

ஒரு நிராகரிப்பின் வலி, 
அவமானத்தின் 
ஆழ்மன வடு, 
சமநிலையற்ற 
சமூகத்தின் சிரிப்பொலி 
மனம் வெக்கையுற்ற நாட்கள் 
எப்படித் அறியுமோ
இந்த அடைமழை!

குறுஞ்செய்தி

 நீ அனுப்பிய குறுஞ்செய்தி 
 அலைவரிசை தவறி 
 அடுத்த கிரகம் சென்று விட்டதாம். 
 விஞ்ஞானிகள் 
 அதன் அர்த்தம் தெரியாமல் 
 குழம்பி கிடக்கிறார்கள். 
 எனக்கு மட்டுமே 
அது புரியும் என்பது 
 எப்படி தெரியும் அவர்களுக்கு?