Wednesday, November 30, 2022

விளக்குத்திரி

விளக்குத் திரி
இறக்கும் முன்னே
விரசா நீ போனதென்ன?
விளக்கணைச்சு வச்சுடுவேன்
வெசெனத்தீ அணைப்பதெங்க?

முன்னமே சொல்லிருந்தா
கூடவே வந்திருப்பேன்
வம்சப்புள்ள வழிமறிக்க
என்ன செய்ய என்னுசிரே ?

முக்காவாசி வாழ்ந்த பின்னே
கால்வாசி கடன் குடுத்த
கடங்காரி காணலியே

நின்னா பூப்பூக்கும்
நடந்தா நீர் பாயும்.
நீ நடக்கா நடைபாதை
வறண்டு போன வாய்க்காலா
வந்து நிக்கும் கோலமென்ன ?

மாயக்கண்ணாடிகள்

மனம் காட்டும் 
மாயக்கண்ணாடிகள் 
வழக்கொழிந்து விட்டன. 
ரசம் மாற்றும் 
ரசாயனம் தெரிந்து கொண்டு 
விட்டார்கள் மனிதர்கள்.

பதிலோன்று

ஜன்னல்களை திறந்து வை.
ஒரு விசும்பல் சத்தத்தில் 
உனது வெறுப்பை 
உணர்ந்து கொள்வேன். 
உனது சிரிப்பின் வாசனையில் 
விருப்பம் தெரிந்து கொள்வேன். 
பதில்கள் எப்போதும் சொற்களால்தான் 
நிரப்பப்பட வேண்டுமென்பதில்லை.

வெக்கை

உப்பள வெண்மையாய் 
வெளுத்துக்கிடக்கிறது வானம். 
ஒற்றைக்காகம் மரக்கிளையில் 
ஒதுங்கி நிற்கிறது. 
மழையின் சமிக்ஞை 
புரிந்து மனதின் 
வெக்கைத்தீர்க்க தயாராகிறேன்.

காலம்

காலம் தீராதது. 
நீதான் 
உனது நாட்களை 
தின்று தீர்க்கிறாய்!

குறுஞ்செய்தியோன்று

பால்வெளியில் 
 நீ அனுப்பிய 
குறுஞ்செய்தியோன்று 
அலைவரிசை தவறி 
அடுத்த கிரகம் சென்றுவிட்டதாம். 
கிரகவாசிகள் 
எளிதாக புரிந்துகொண்டனர், 
இது 
அன்பின் மொழியென்று. 
 நம்மவர்கள்தான் 
அதில் சாதிக் குறியீடுகள் 
 கண்டுள்ளதாகவும், 
பொருளாதார மதிப்பை 
தரம் பார்த்ததாகவும், 
மதக் கோட்பாடுகளை 
 மதிப்பிட்டுள்ளதாகவும் 
 பிதற்றித் திரிகிறார்கள். 

அந்தக் குறுஞ்செய்தி 
அந்தக் கிரகத்திலாவது 
அதன் மதிப்போடு 
 வாழ்ந்துகொள்ளட்டும்.

கொஞ்ச நேரம் இரு.

நித்தமொரு வானம், 
விருப்பமான 
வண்ணங்களில் வானவில் 
 அனுக்கமான அந்திமழைச்சாரல் .., 
 இதமான இளவேனில், 
மதிமயக்கும் மாலைத்தென்றல். 
கொஞ்ச நேரம் இரு. 
உன் இருப்பால் 
மட்டுமே சாத்தியம் இவையெல்லாம். 

நம் நினைவுகளை 
ஞாபக அடுக்குகளிலிருந்து 
தேடித் தருகிறாய், 
நானோ 
நிகழ்கால 
நிதர்சனமறியா 
நித்திரையில் இருக்கிறேன். 
கொஞ்ச நேரம் இரு. 
உன்னால் மட்டுமே முடியும் 
என்னை துயிலெழுப்பாமல். 

உனக்கு வேண்டுமானால் 
தெரியாமல் இருக்கலாம். 
 உனக்கான அன்பை 
ஒரு கோப்பையில் 
சேகரித்துக்கொண்டுதான் 
இருக்கிறேன். 
மனமுடைந்த நாட்களில் 
மட்டும் கொஞ்சம் 
திருடிக் கொள்கிறேன். 
கொஞ்ச நேரம் இரு. 
மீண்டும் நிரப்பி விட்டு 
சொல்லியனுப்புகிறேன். 

இன்னுமொரு சாதாரண 
பொழுதென கழிகின்றன 
உன் கணங்கள். 
 நானோ 
 சலனமூட்டும் உன்னுடனான 
 சந்திப்புகளை தவிர்க்கும் 
சாதுர்யமின்றி தவித்தொழிகிறேன். 
 கொஞ்ச நேரம் இரு. 
பேசிப் பழகிக்கொள்கிறேன் உன்னோடு .

மன்னிப்பு

ஒரு மன்னிப்பு 
என்பது ஒருவருடன் 
நின்று போவதில்லை. 
அது சட்டமாக்கப் படலாம்,
ஆட்சி மாறலாம். 
ஒருவன் தனது சுயமிழக்கலாம். 
அவ்வளவு எளிதாக 
இனிமேல் 
மன்னிப்பு கேட்டுவிடாதீர்கள்!

நிராகரிப்பின் வலி,

ஒரு நிராகரிப்பின் வலி, 
அவமானத்தின் 
ஆழ்மன வடு, 
சமநிலையற்ற 
சமூகத்தின் சிரிப்பொலி 
மனம் வெக்கையுற்ற நாட்கள் 
எப்படித் அறியுமோ
இந்த அடைமழை!

குறுஞ்செய்தி

 நீ அனுப்பிய குறுஞ்செய்தி 
 அலைவரிசை தவறி 
 அடுத்த கிரகம் சென்று விட்டதாம். 
 விஞ்ஞானிகள் 
 அதன் அர்த்தம் தெரியாமல் 
 குழம்பி கிடக்கிறார்கள். 
 எனக்கு மட்டுமே 
அது புரியும் என்பது 
 எப்படி தெரியும் அவர்களுக்கு?