Monday, December 2, 2013

நான் தொலைந்துபோகக்கூடும்

ஒரு நாள் என்னிலிருந்து

நான் தொலைந்துபோகக்கூடும்..

இப்போது என்னை விரும்புபவர்கள்

வெறுப்பவர்களாகவும்,

இப்போது என்னை வெறுப்பவர்கள்

விரும்புபவர்களாகவும்

மாறிப்போவார்கள் அன்றிலிருந்து.

Friday, June 14, 2013

வள்ளல்கள்

அம்மா வழித் தாத்தா ஒருவர்
ஊரிலிருந்து வருவதாலேயே
"ஊர்த்தாத்தா" என்றழைப்போம்

வயது வாரியாக
நாலணா முதல் நான்கு ரூபாய் வரை
என் வயதொத்த அனைவருக்கும்
வாரிக் கொடுப்பதுண்டு .

வருகையை எதிர்பார்த்து
வள்ளலென சொல்லித் திரிவோம்

வருடங்கள் கழிந்த பின்னொரு நாளில்
போதை முற்றிய பொழுதொன்றில்
என் தந்தை, பிறர் சொத்துக்கள்
அனைத்தையும் அவர் சூறையாடிய
கதையொன்றை உளறிக் கொட்டினார்.

வள்ளல்களாய் காண்பிப்போர் யாரும்
உண்மையில் வள்ளல்களில்லை
என்பதை அறிவதொன்றும்
அவ்வளவு எளிதில்லை.

Wednesday, December 5, 2012

வேதியியல்



எங்கேனும் ஒளிந்திருக்க கூடும்
எல்லோருக்கும் தெரிந்த
நம்மால் ஒருபோதும்
உணரப்படாத
உனக்கும் எனக்குமிடையேயான 
வேதியியல்.

Tuesday, November 13, 2012

தீபாவளி

வருடம் ஒரு முறைக்கான
புது சட்டை,
அண்ணனுடன் பங்கு
பிரிக்கப் படும் பட்டாசு,
வீட்டு முன் குவியும்
பட்டாசுக் குப்பையின் பெருமிதம்,
ஆசிர்வாதம் அளிக்கும்
பத்து ருபாய் நோட்டுக்கள்,
இன்னுமிருக்கிறதா
அப்படியொரு தீபாவளி?

Friday, October 26, 2012

ஏன் வாழ்கிறோம்

எந்த மாதிரியான தேசத்தில்
வாழ்கிறோம் என்பதை விட
ஏன் வாழ்கிறோம் என்கிற
கேள்வியே மேலோங்கி நிற்கிறது.

நான் நானா ?

நாளை ஒரு நாள்
நான் பிறக்க கூடும்
என்ற நம்பிக்கையிலேயே...
தினம் தினம் ஒருவனாய்
என்னை சாகடிக்கிறேன்.

Monday, October 15, 2012

மனமுகம்


மனமுகம்
முகம் சற்றே அகோரமாய் 
மாறக் கண்டு அதிர்ச்சியுற்றேன்.
மனம் போகும் போக்கிலே 
முகம் மாறக் கடவதாய்
 கட்டளையிட்டுருப்பதாய் 
 சொல்லி சென்றான் 
 கடவுளரில் ஒருவன். 

Thursday, May 10, 2012

அழகு

தமது அழகு குறித்த
அவநம்பிக்கைகளை
அவ்வப்போது
தட்டி எழுப்புகிறது,
அழகு சாதன விளம்பரங்கள்.

Friday, May 4, 2012

மனமொழி

மனமொழி
------------------------------


ஆங்கிலம் இந்தி
என பிற மொழிகளை
என் மகளுக்கு
கற்பிக்கச் சொல்லி
அடம் பிடிக்கிறாள்
என் மனைவி.
மொழிகளை படிப்பதைக்
காட்டிலும்
மனங்களை படிப்பதே
அவசியம் என
எப்படி சொல்வது அவளிடம்?

குழந்தைகளின் உலகம்

குழந்தைகளின் உலகம்
------------------------------
நாம் செய்வதையெல்லாம்
செய்து காட்டும் கணத்திலிருந்து
தொடங்கி விடுகிறது,
அவளது எதிர்காலம்
குறித்த அச்சம்.

---------------------------------------------------------------------

குழந்தைகளின் உலகத்திற்கான
நுழைவாயிலில் அறிவிப்புப்பலகை
"பொய் பேசுபவர்களுக்கு இடமில்லை"
அதனாலோ என்னவோ
இன்னும் அது
அவர்களின் உலகமாய் இருக்கிறது.