Friday, January 19, 2024
இராமன் இட்ட கோடுகள்
அணிலோன்று காட்டில்
பெருமை பேசித் திரிந்ததாம்
இராமன் இட்ட கோடுகள் தாங்கிய இனமென்று.
வரிக்குதிரைகளும்
வண்ணத்துப் பூச்சிகளும்
வரிசை கட்டி நின்றனவாம்
எங்கள் மீதும் வரிகள் உண்டென்று,
அணில் யோசித்து சொல்லியதாம்,
ஒத்துக்கொள்ள மாட்டார்கள்!
"பாவம் நீங்கள்
பாடப் புத்தகத்தில் இல்லையென்று!
கடவுள்
புதிய கோவிலுக்கு கடவுள் வர மறுக்கிறார்.
இது உங்கள் கோவில்
நீங்கள் வந்தே ஆக வேண்டுமென கட்டளை இடுகிறான் அரசன்.
நான் ஏற்கனவே இங்கேதான் இருந்தேன்.
நீதான் என்னை துரத்தினாய் என்கிறார் கடவுள்.
அது வேறொருவர்
என்கிறான் அரசன்.
அது உனது புரிதல்
என்கிறார் கடவுள்.
நான் எங்குமே அங்கே இல்லை.
நீயே நிறைந்து இருக்கிறாய்
வந்தாலும் என்னை வணங்க யாரும் வரப் போவதில்லை என்று சொல்லி மறைகிறார்!
Friday, January 5, 2024
கடவுள்
காசுக்கு கொலை செய்பவன்
காணிக்கை வைக்காமல்
தொழிலுக்கு செல்வதில்லை,
திருநீறு இல்லாமல்
திருடப்போவதேயில்லை
திருடன்,
லஞ்சப் பணத்தை
கடவுள் மறுத்ததுமில்லை,
திருட்டுக் குடுத்தவன் மனுவும் மறுக்கப் பட்டதில்லை,
கொலையுண்டவன்
குடும்பம் கோவிலில்
குற்றப்பத்திரிகை
வைக்க மறந்ததில்லை
எல்லோருக்கும் எல்லாமுமாக
கடவுளாய் இருப்பது
ஒன்றும் அவ்வளவு
எளிதில்லை!
வாழும் வீடு
யாருமில்லாத
வாழ்ந்து வளர்ந்த
கிராமத்து வீட்டிற்குள்
நுழைகிறேன்.
இப்போது எல்லோரும்
இருக்கிறார்கள்!
Subscribe to:
Posts (Atom)