Friday, January 19, 2024

அன்பின் வாசனை!

 


ஊமை சிறுமியொருத்தி
கைகளால் சைகை
செய்து நலம் விசாரிக்க,
காற்றெங்கும்
அன்பின் வாசனை!

கடவுள்

 

புதிய கோவிலுக்கு கடவுள் வர மறுக்கிறார்.

இது உங்கள் கோவில்
நீங்கள் வந்தே ஆக வேண்டுமென கட்டளை இடுகிறான் அரசன்.

நான் ஏற்கனவே இங்கேதான் இருந்தேன்.
நீதான் என்னை துரத்தினாய் என்கிறார் கடவுள்.

அது வேறொருவர்
என்கிறான் அரசன்.

அது உனது புரிதல் 
என்கிறார் கடவுள்.

நான் எங்குமே அங்கே இல்லை.
நீயே நிறைந்து இருக்கிறாய் 
வந்தாலும் என்னை வணங்க யாரும் வரப் போவதில்லை என்று சொல்லி மறைகிறார்!

Hmm


எல்லா கேள்விகளுக்கும்
பதிலாய் hmm மட்டுமே
தருகிறாய்,
நிராகரிப்பின் முதல் சொல்தான்
Hmm என்று உனக்கும்
தெரியும் என்று நம்புகிறேன்!

 

Friday, January 5, 2024

பேரன்பை

 

சண்டையிட்டு பிரிந்த

ஒருவரை தேடிக்கொண்டு இருக்கிறேன்,

நட்பு பாராட்டி,

எனது பெருந்தன்மை காட்டவும், 

பேரன்பை சொல்லவும்,

தேடிப் பார்த்தால்

ஒருவரும் இல்லை,

அவசரமாய் சண்டையிட்டு பின் சேர்ந்துகொள்ள 

ஒருவர் தேவைப் படுகிறது!

தயவு செய்யுங்கள்!

தந்தை

 

தந்தை முகமொத்தவர்
கையேந்தும்போது
ஏனோ பிச்சையிட
மனம் ஒப்புவதேயில்லை!

கடவுள்

 

காசுக்கு கொலை செய்பவன் 

காணிக்கை வைக்காமல்

தொழிலுக்கு செல்வதில்லை,

திருநீறு இல்லாமல்

திருடப்போவதேயில்லை

திருடன்,

லஞ்சப் பணத்தை

கடவுள் மறுத்ததுமில்லை,

திருட்டுக் குடுத்தவன் மனுவும் மறுக்கப் பட்டதில்லை,

கொலையுண்டவன்

குடும்பம் கோவிலில்

குற்றப்பத்திரிகை

வைக்க மறந்ததில்லை

எல்லோருக்கும் எல்லாமுமாக

கடவுளாய் இருப்பது

ஒன்றும் அவ்வளவு

எளிதில்லை!

கடவுள்

 


கடவுள் WhatsApp ல்

"நான்தான் கடவுள் உதவி வேண்டுமா கேள் " என்று தகவல் அனுப்பி உள்ளார்.

அறியாத எண் என்பதால்

True callerல்

சரிபார்க்க சென்றேன்.

எல்லோருமே"Spam"

என்றே குறித்து வைத்துள்ளார்கள்!

நானும் Block செய்து விட்டேன்!

வாதை

 

ஒரு பெரும் வலி தேவையாய்தானிருக்கிறது,

கொடுங்காய்ச்சல் ஒன்றும்,

எத்தனை போர்த்தியும்

மாளாத குளிர் ஒன்றும்,

வேர்த்தும் பிடிபடாத

வெம்மையோன்றும்,

எல்லாமும் எப்போதேனும்

தேவையாய்தானிருக்கிறது,

எனது நாளை என்பது

எத்தனை இயல்பானது என்று புரிய வைக்

வாழும் வீடு


யாருமில்லாத
வாழ்ந்து வளர்ந்த
கிராமத்து வீட்டிற்குள்
நுழைகிறேன்.
இப்போது எல்லோரும்
இருக்கிறார்கள்!

Saturday, June 24, 2023

மனிதம்

 

வீட்டுப் பரண் மேல்
அணில் ஒன்று
கூடு கட்டி 
குட்டி போட்டுள்ளது.
தூக்கி போட
மனம் வரவில்லை.
பரவாயில்லை
இந்தக் கணமாவது
மனிதனாய் இருந்துவிட்டு போகிறேன்.