Saturday, July 20, 2024

கருணைக் காயங்கள்

திருவிழா காலம்

முடியாதொரு சொப்பனம்

ஊதுவர்த்தியொன்று உணரமுடியாதபடி அணைவதுபோல், மழை நின்றாலும் மரம் துளிர்க்கும் மழைத்துளிபோல், ஆதவன் மறைந்தத அறிய முடியாதபடி அந்தி இன்னும் வெறித்துக் கிடப்பதுபோல், மரம் மயங்கும்பட மலர் உதிர்த்துச் செல்லும் தென்றலை போல்,  உன் பிரிவும்  இருந்து இருக்கலாம், மீள்ந்தும் முடிக்க முடியாதொரு சொப்பனம் போல்.....

கண்ணாத்தா

பூக்குழி இறங்க சொல்கிறாய்! தீச்சட்டி எடுக்கச்சொல்கிறாய்! வேஷம் கட்டி ஆடவும்சொல்கிறாய்! நூறு முகமுடையாள்! ஆயிரம் கையுடையாள்! லட்சம் கண்ணுடையாள்! நீயும் கொஞ்சம் எங்களுக்காக நிலமிறங்கு, அநீதி கொளுத்து, வேஷம் களை, போதும் இந்த பாரபட்சம்!

பழக்கம்

கால்கள் பழையதெனினும் செருப்பு புதிதெனில், நடை பழக ஒரு நாளேனும் ஆகத்தான் செய்கிறது!

அதீத

அதீத காரம், அதீத இனிப்பு, அதீத கசப்பு, அதீத அன்பு, அதீத மகிழ்ச்சி , அதீத துயரம், அதீதங்களை அணுக மறுக்கிறது மனம். உப்பு சப்பில்லாதவாழ்க்கை ஒன்றும்அவ்வளவு பெரிய குற்றமில்லைதானோ.?..

Friday, January 19, 2024

இராமன் இட்ட கோடுகள்

 


அணிலோன்று காட்டில்
பெருமை பேசித் திரிந்ததாம்
இராமன் இட்ட கோடுகள் தாங்கிய இனமென்று.
வரிக்குதிரைகளும்
வண்ணத்துப் பூச்சிகளும்
வரிசை கட்டி நின்றனவாம்
எங்கள் மீதும் வரிகள் உண்டென்று,
அணில் யோசித்து சொல்லியதாம்,
ஒத்துக்கொள்ள மாட்டார்கள்!
"பாவம் நீங்கள்
பாடப் புத்தகத்தில் இல்லையென்று!

அன்பின் வாசனை!

 


ஊமை சிறுமியொருத்தி
கைகளால் சைகை
செய்து நலம் விசாரிக்க,
காற்றெங்கும்
அன்பின் வாசனை!

கடவுள்

 

புதிய கோவிலுக்கு கடவுள் வர மறுக்கிறார்.

இது உங்கள் கோவில்
நீங்கள் வந்தே ஆக வேண்டுமென கட்டளை இடுகிறான் அரசன்.

நான் ஏற்கனவே இங்கேதான் இருந்தேன்.
நீதான் என்னை துரத்தினாய் என்கிறார் கடவுள்.

அது வேறொருவர்
என்கிறான் அரசன்.

அது உனது புரிதல் 
என்கிறார் கடவுள்.

நான் எங்குமே அங்கே இல்லை.
நீயே நிறைந்து இருக்கிறாய் 
வந்தாலும் என்னை வணங்க யாரும் வரப் போவதில்லை என்று சொல்லி மறைகிறார்!

Hmm


எல்லா கேள்விகளுக்கும்
பதிலாய் hmm மட்டுமே
தருகிறாய்,
நிராகரிப்பின் முதல் சொல்தான்
Hmm என்று உனக்கும்
தெரியும் என்று நம்புகிறேன்!