Friday, January 5, 2024

தந்தை

 

தந்தை முகமொத்தவர்
கையேந்தும்போது
ஏனோ பிச்சையிட
மனம் ஒப்புவதேயில்லை!

கடவுள்

 

காசுக்கு கொலை செய்பவன் 

காணிக்கை வைக்காமல்

தொழிலுக்கு செல்வதில்லை,

திருநீறு இல்லாமல்

திருடப்போவதேயில்லை

திருடன்,

லஞ்சப் பணத்தை

கடவுள் மறுத்ததுமில்லை,

திருட்டுக் குடுத்தவன் மனுவும் மறுக்கப் பட்டதில்லை,

கொலையுண்டவன்

குடும்பம் கோவிலில்

குற்றப்பத்திரிகை

வைக்க மறந்ததில்லை

எல்லோருக்கும் எல்லாமுமாக

கடவுளாய் இருப்பது

ஒன்றும் அவ்வளவு

எளிதில்லை!

கடவுள்

 


கடவுள் WhatsApp ல்

"நான்தான் கடவுள் உதவி வேண்டுமா கேள் " என்று தகவல் அனுப்பி உள்ளார்.

அறியாத எண் என்பதால்

True callerல்

சரிபார்க்க சென்றேன்.

எல்லோருமே"Spam"

என்றே குறித்து வைத்துள்ளார்கள்!

நானும் Block செய்து விட்டேன்!

வாதை

 

ஒரு பெரும் வலி தேவையாய்தானிருக்கிறது,

கொடுங்காய்ச்சல் ஒன்றும்,

எத்தனை போர்த்தியும்

மாளாத குளிர் ஒன்றும்,

வேர்த்தும் பிடிபடாத

வெம்மையோன்றும்,

எல்லாமும் எப்போதேனும்

தேவையாய்தானிருக்கிறது,

எனது நாளை என்பது

எத்தனை இயல்பானது என்று புரிய வைக்

வாழும் வீடு


யாருமில்லாத
வாழ்ந்து வளர்ந்த
கிராமத்து வீட்டிற்குள்
நுழைகிறேன்.
இப்போது எல்லோரும்
இருக்கிறார்கள்!

Saturday, June 24, 2023

மனிதம்

 

வீட்டுப் பரண் மேல்
அணில் ஒன்று
கூடு கட்டி 
குட்டி போட்டுள்ளது.
தூக்கி போட
மனம் வரவில்லை.
பரவாயில்லை
இந்தக் கணமாவது
மனிதனாய் இருந்துவிட்டு போகிறேன்.

காலம்

 


முங்கு நீச்சலில்
எப்போதும் முந்துவது
மூன்றாம் தெரு சரவணன்!
மழைக்காலங்களில்
மறக்காமல் வறுத்த அரிசியில்
பொறித்த ஈசல் 
கொண்டுவருவாள் பரமு.
இப்போது குளமும் இல்லை! மழையும் இல்லை!
கூடித் திரிந்த குழுவும் இல்லை

எல்லோருக்குமே எல்லாமும்



எல்லாருக்குமே வானம்

எல்லோருக்குமே மழை

எல்லோருக்குமே வெயில்

எல்லோருக்குமே பனி

எல்லோருக்குமே எல்லாமும்

எங்கே வந்தது வேற்றுமை?

Sunday, May 14, 2023

அம்மா!

 அவள் சுமந்ததாய்

சொன்னதில்லை,

சுமப்பதின் வலி குறித்து

நாங்கள் கேட்டதுமில்லை,

அது சுகமான சுமையென்று சொல்லியே,

அவளின் சுமை இறக்க விட்டதேயில்லை,

அன்பின் வன்முறையில்

ஆகப் பரிதாபத்திற்குரிய 

ஆன்மா அம்மா!

Friday, April 7, 2023

மழை

 

மழை கொண்டு வருவது
மண்வாசனை மட்டுமல்ல
உன் வாசனையும்..
-----------------------------------------

சாலைகளில் மழை
விழவே இல்லை,
நீ வந்து நின்றாய்
நான் நனைந்தே போகிறேன்!
-------------------------------------------------

மழை நாட்களில்
நனையாமலே காய்ச்சல்.
உன் நினைவுகளின் 
குளுமை தாங்காமல்.