Saturday, June 24, 2023

மனிதம்

 

வீட்டுப் பரண் மேல்
அணில் ஒன்று
கூடு கட்டி 
குட்டி போட்டுள்ளது.
தூக்கி போட
மனம் வரவில்லை.
பரவாயில்லை
இந்தக் கணமாவது
மனிதனாய் இருந்துவிட்டு போகிறேன்.

காலம்

 


முங்கு நீச்சலில்
எப்போதும் முந்துவது
மூன்றாம் தெரு சரவணன்!
மழைக்காலங்களில்
மறக்காமல் வறுத்த அரிசியில்
பொறித்த ஈசல் 
கொண்டுவருவாள் பரமு.
இப்போது குளமும் இல்லை! மழையும் இல்லை!
கூடித் திரிந்த குழுவும் இல்லை

எல்லோருக்குமே எல்லாமும்



எல்லாருக்குமே வானம்

எல்லோருக்குமே மழை

எல்லோருக்குமே வெயில்

எல்லோருக்குமே பனி

எல்லோருக்குமே எல்லாமும்

எங்கே வந்தது வேற்றுமை?

Sunday, May 14, 2023

அம்மா!

 அவள் சுமந்ததாய்

சொன்னதில்லை,

சுமப்பதின் வலி குறித்து

நாங்கள் கேட்டதுமில்லை,

அது சுகமான சுமையென்று சொல்லியே,

அவளின் சுமை இறக்க விட்டதேயில்லை,

அன்பின் வன்முறையில்

ஆகப் பரிதாபத்திற்குரிய 

ஆன்மா அம்மா!

Friday, April 7, 2023

மழை

 

மழை கொண்டு வருவது
மண்வாசனை மட்டுமல்ல
உன் வாசனையும்..
-----------------------------------------

சாலைகளில் மழை
விழவே இல்லை,
நீ வந்து நின்றாய்
நான் நனைந்தே போகிறேன்!
-------------------------------------------------

மழை நாட்களில்
நனையாமலே காய்ச்சல்.
உன் நினைவுகளின் 
குளுமை தாங்காமல்.

அகதி அடையாளம்

புலம் பெயர்ந்த 
அகதியிடம் இருந்த 
கடைசிப் புகைப்படம்
கடவுச்சீட்டில் இருந்தது.
கிழித்தெறிந்தால் மட்டுமே 
அகதி அந்தஸ்து.
இருந்த கடைசி 
அடையாளமும் அழிக்கப்பட்டது.
ஊர் பெயர் நாடற்றவனின்
நாட்கள் அவ்வளவு 
எளிதாய் முடிவதில்லை
கடிகாரம் காட்டுவது போல.

இடமாற்றம்

 


வீடு மாறுவது என்பது
பொருட்களின் இடமாற்றம் அல்ல.
மனதின் இடமாற்றம்.
வீட்டின் சுவர்களில்
உங்களின் ரகசியங்கள்
விட்டுச்செல்கிறீர்கள்,
உங்கள் மனதின் ஒரு பிரதியை விட்டுச்செல்கிறீர்கள்,
வசித்துச் சென்ற
வீடுகளை கடக்கும்பொழுது
உங்கள் காலத்தின்
ஒரு பகுதியை 
கூர்ந்து பார்த்து
கடக்கிறீர்கள்.

ஒரு கோப்பை தேநீர்


எல்லா நகரங்களிலும்
ஒரு கோப்பை தேநீர்
காத்திருக்கிறது
பிரிந்த நட்பை
சந்திக்கும் தருணத்திற்காக,
பழைய காதலை
புதுப்பிக்கும் வாய்ப்புக்காக,
ஒரு நீண்ட மௌனத்தை கலைப்பதற்காக,
விடை தெரியாமல் போன கேள்வியின் பதிலுக்காக,
அங்கே தேநீரின் சுவை
 ஒரு பொருட்டேயல்ல 
என்பது போல...

Wednesday, March 1, 2023

சாமியாடுதல்

 

குடிக்கார கணவனின் 
அடி உதை,
மாமியாரின் வசைச்சொற்கள்,
ஆண்டு முழுதுமன 
அயராத வேலைப்பளு,
திருவிழா தவறாமல்
அம்மன் வந்ததாய்
சாமியாடி தீர்த்து விடுவாள்
அம்மா

உன் கள்ளச்சிரிப்பில்

 சரணம்


உன் கள்ளச் சிரிப்பில்
நான் என்னை தொலைத்தேன்
உன்னை நினைக்க
நான் என்னை மறந்தேன்

நீ அங்கு நடக்க
நான் இங்கே விழுந்தேன்

நீ இல்லா இடத்தில்
நான் இறந்தே கிடந்தேன்

நீ வந்த நொடியில்
உயிர் பற்றி எழுந்தேன்


பல்லவி1

ஒரு வெட்ட வெளியில்
பட்ட மரமாய் 
நான் வீழ்ந்து கிடந்தேன்
ஒரு சொட்டும் மழையாய்
பட்டு தெறித்தாய்
நான் பூக்கள் விரித்தேன்
உயிர் பெற்ற மரமாய்!


உன் கள்ளச் சிரிப்பில்
நான் என்னை தொலைத்தேன்
உன்னை நினைக்க
நான் என்னை மறந்தேன்

நீ அங்கு நடக்க
நான் இங்கே விழுந்தேன்

நீ இல்லா இடத்தில்
நான் இறந்தே கிடந்தேன்

நீ வந்த நொடியில்
உயிர் பற்றி எழுந்தேன்

பல்லவி2

அந்த வானக்குடையில்
ஒரு நட்சத்திரமாய்
மின்னும் பொழுதில்
உன்னைக் கடந்தேன்
எந்தன் இரவு
இன்று பகலாய்
மாறிக் கிடக்க
நான் தூக்கம் தொலைத்தேன்


உன் கள்ளச் சிரிப்பில்
நான் என்னை தொலைத்தேன்
உன்னை நினைக்க
நான் என்னை மறந்தேன்