Wednesday, March 1, 2023

அரசன்


விழித்துப் பார்த்தால்
நாட்டின் அரசனாக இருக்கிறேன்,
பட்டாடை சகிதம்
பெரும் போஜனம் கிடைத்தது,
அடுத்ததாய் அமைச்சரவை கூட்டம்,
கஜானா நிலவரம் சரியில்லை,
அந்நிய நாட்டு அலப்பறை வேறு,
வரி வசூலிப்பு ஒன்றும்
பிரமாதமில்லை,
புதிதாய் கோவில் கட்ட வேண்டுமாம் 
ஆஸ்தான ஜோதிடர் அறிவுரை,

எதிரி நாட்டு அரசன்
போருக்கு ஓலை அனுப்பியுள்ளான்.

நான் கிளம்பிவிட்டேன்
பழைய வேலைக்கு
ஊதியம் குறைந்தாலும் 
பரவாயில்லையென்று

Friday, February 3, 2023

இதய எமோஜிக்கள் 💛💚💙❤️

 

சிவப்பு இதயங்கள்,
பச்சை இதயங்கள்,
ஏன்
ஊதா இதயங்களும் உண்டு!
வண்ண வண்ண பூக்கள் போல,
வண்ண வண்ண இதயங்கள்.
யாரேனும் அவற்றில்
அன்பின் வாசனை நுகர்ந்ததுண்டா?

அன்பின் நிமித்தமாய்

 


அன்பின் நிமித்தமாய்
என்னை நீ
பயன்படுத்திக் கொள்வதில்
எந்த வருத்தமும் இல்லை,

தயவுசெய்து 
அந்த சூட்சுமத்தை
மட்டும் வேறொருவருக்கும்
சொல்லிக் குடுத்து விடாதே

எல்லோரிடமும் என்னால்
ஏமாற முடியாது.

Wednesday, January 25, 2023

சுதந்திரம்

 


உங்கள் பேனாக்களை மட்டுமே

உடைத்துள்ளோம்,

மற்றப்படி நீங்கள்
எழுதுவதற்கு தடையேதுமில்லை,


உங்கள் உதடுகளை
மட்டுமே தைத்துள்ளோம்,
மற்றப்படி நீங்கள்
பேசுவதற்கு தடையேதுமில்லை,

உங்களின் 
ஒளிப்படக்கருவிகளின் 
படச்சுருள்களை மட்டுமே
ஒளித்து வைத்துள்ளோம்
மற்றபடி நீங்கள்
விரும்பியவற்றை படம்பிடிக்கலாம்,

அச்சகங்கள், ஊடகங்கள்
உங்களின் விருப்பத்தின்படியே
விலை பேசியுள்ளோம்,

மற்றபடி இங்கே நீங்கள்
விரும்பியவற்றை 
செய்ய உங்களுக்கு 
எந்த வித தடையுமில்லை..

நீங்கள் 
சுதந்திரமாக இருப்பதாய் 
எங்களால் மட்டுமே 
உங்களை 
சொல்ல வைக்கவும் முடியும்.

நம்புங்கள் 
நீங்கள் சுதந்திரமாகத்தான் இருக்கிறீர்கள்!

தொலைந்து பாருங்கள்

 

நீங்கள் தொலைந்து பாருங்கள்.
அடையாளம் அறியா
கூட்டத்தின் நடுவே
ஒருவனை போல அல்ல..
ஒரு அடர்ந்த காட்டில்
இருக்கும் ஒரு முள்செடி போல அல்ல..
ஆகப்பெரும் சமவெளியில்
ஒரு சாதாரணன் போல
ஒர் நாளேனும் 
உங்களை நீங்களே
அறியா வண்ணம்
தொலைந்து பாருங்கள்.

Friday, December 30, 2022

பால்யம்

 பிறந்து வளர்ந்த ஊரை

கடக்கும்போதெல்லாம்

கூடவே சேர்ந்து

பயணிக்கிறது பால்யமும்.












Saturday, December 24, 2022

கிருத்துவ நல்நாள் வாழ்த்துக்கள்!




தேவன் நமக்காகத்தான்
சிலுவை சுமந்தான்,
கல்லறையில் மீந்த
பாவங்களும் அவனால் 
கழுவப் பட்டதாகவே
நம்புவோமாக!
அவன் மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுந்ததன்
செய்தி ஒன்றும் புதிதல்ல...
உங்கள் 
புண்ணியக் கணக்கில்
கூட்டுத்தொகை குறையாமல்
மட்டுமே 
பார்த்துக் கொள்ளச்சொல்கிறான்.
பார்த்துக்கொள்ளுங்கள்!
இனிய கிருத்துவ 
நல்நாள் வாழ்த்துக்கள்!

Monday, December 19, 2022

மறப்பது ஒரு வரம்

மறப்பது ஒரு வரம்

ஒரு பிரிவு தரும் நினைவு
அது தரும் வலி.
நான் 
என்ன வேண்டுமானாலும் 
தருவேன் அந்த வலியை மறக்க

ஒரு முறையேனும்
தங்கள் வலியை
வழியிலே விட்டுச் செல்லும்
ஆத்மாக்கள் பாக்கியவான்கள்.
.

விருப்பப்படி மறப்பதற்கான
ஒரு வரம்
நமக்கு அமைந்ததே இல்லை.
ஒரு பிரிவு தரும் நினைவு
அது தரும் வலி.
நான் 
என்ன வேண்டுமானாலும் 
தருவேன் அந்த வலியை மறக்க

மலைப்பயணங்கள்


காலத்தை முன்பின்
திருப்பிப் போடும்
நீண்டு நெளிந்த
ஊசிமுனை வளைவுகள்,

அடிமனதை கிளறிப்பார்க்கும்
அதலப்பாதாளங்கள்.

கொதித்தெழும் உணர்வுகளை
மட்டுப்படுத்தும்
பனிமூடிய பாதைகள்,

மலைப்பயணங்கள்
எப்போதும் மனதோடுதான்
பயணிக்கின்றன.

தேர்


ஊர் கூடி 

தேர் இழுக்க

குழந்தை 

வடம் பிடித்ததும்

நகரத் தொடங்கியது.