பார்வையிழந்த சிறுமியொருத்தி
பேருந்துப் பயணத்தில்
பக்கத்து இருக்கையில்,
வழிநெடுகக் கிடைத்த
காட்சிகளின் கதை சொன்னேன்.
கொஞ்சம் கொஞ்சமாக
அவள் கண்களின் வழியே
காணத் தொடங்கினேன் இவ்வுலகம்.
சாலையோரம் யாருமற்ற
சிதிலமடைந்த ஜமீன் பங்களா.
உடல் முழுக்க நகைகளோடு
அமர்ந்திருப்பாள்
முன்திண்ணையில் ஜமீன் மனைவி,
பட்டாடையின்றி ஜமீனின்
புறப்பாடு இருந்ததில்லை,
விழாக்காலங்களில்
எல்லோருக்கும் விருந்து நிச்சயம்,
வாழ்ந்து கெட்டவனின் வீடு
கடந்த காலத்தை எப்போதும்
சொல்லிக்கொண்டே இருக்கிறது.