Wednesday, November 30, 2022

கடவுள்

 நேற்று

கடவுள் கனவில் வந்தார்.

நீங்கள் கனவில் மட்டுமே

வருமாறு வரம் கேட்டேன்.

நிதர்சனம் உங்களால்

தாங்கவே முடியாதென்று.

இயல்பே இயற்கை

 எப்போதும் போலவே 
 இருந்து விடு. 
 நீண்ட வெறுப்பின் இடையே
 சிறு புன்னகை 
 அந்நியமாகவே படுகிறது

இழப்பு

 மயில் உதிர்த்த 
 தோகையொன்று.. 
 பாம்பு 
 உரித்த சட்டையொன்று..
 தூக்கி எறிந்த துக்கம் போல... 
 எல்லா இழப்புகளும்
 இழப்புகளல்ல..

உனது இருப்பு

இன்னுமா இருக்கிறாய் 
நீ 
இல்லையென்றால் தான் 
இப்போதெல்லாம் வருகிறேன். 
உன் 
இருப்பின் இம்சை 
பொறுக்க முடிவதேயில்லை

பேரன்பின் சமவெளி.

ஒரு 
பெருங்கனவாய் விரவிக் கிடக்கிறது 
பேரன்பின் சமவெளி. 
கருணையின் சிறுதுளி 
அக்கனவை துரத்துகிறது. 
நம்பிக்கையின் காலடியொற்றி 
பாதைகள் மாறுகின்றன. 
குழந்தை பகிரும் பருக்கையில் 
பிரம்மம் அடங்கித் தணிகிறது.

மழை நின்ற போதிலும்

மழை நின்ற போதிலும் 
பனித்துளிகள் பார்க்கிறேன் 
ஒவ்வொரு துளியிலும் 
உன் பிம்பம் காண்கிறேன் 
 
நீ வந்து சென்ற நாள் 
மேகங்கள் கூட்டமே 
நீயில்லா நாளிலே 
வானமது வாட்டமே 


தூறல் விழும் தூரங்கள் 
நீயிருந்தால் அருகிலே 
வந்த செய்தி என்றுமே 
மழை வந்து சொல்லுமே

 
நான் காணா உலகங்கள் 
உன் உள்ளக்கிடக்கிலே 
எப்போதும் இருந்திடு 
என் இருக்கை அருகிலே 

மழை நின்ற போதிலும் 
பனித்துளிகள் பார்க்கிறேன் 
ஒவ்வொரு துளியிலும் 
உன் பிம்பம் காண்கிறேன்

உனது வருகை

உனது வருகை 
எல்லாம் தெரிந்து கொள்வேன் 
முன்னறிவிப்பு தேவையில்லை. 
 முகக்குறிப்பில் 
புரிந்து கொள்வேன் 
வந்து நிற்கும் காரணத்தை.. 
இருந்தாலும் 
தெரியாதது போலவே 
 கேட்டு வைப்பேன்.

விளக்குத்திரி

விளக்குத் திரி
இறக்கும் முன்னே
விரசா நீ போனதென்ன?
விளக்கணைச்சு வச்சுடுவேன்
வெசெனத்தீ அணைப்பதெங்க?

முன்னமே சொல்லிருந்தா
கூடவே வந்திருப்பேன்
வம்சப்புள்ள வழிமறிக்க
என்ன செய்ய என்னுசிரே ?

முக்காவாசி வாழ்ந்த பின்னே
கால்வாசி கடன் குடுத்த
கடங்காரி காணலியே

நின்னா பூப்பூக்கும்
நடந்தா நீர் பாயும்.
நீ நடக்கா நடைபாதை
வறண்டு போன வாய்க்காலா
வந்து நிக்கும் கோலமென்ன ?

மாயக்கண்ணாடிகள்

மனம் காட்டும் 
மாயக்கண்ணாடிகள் 
வழக்கொழிந்து விட்டன. 
ரசம் மாற்றும் 
ரசாயனம் தெரிந்து கொண்டு 
விட்டார்கள் மனிதர்கள்.

பதிலோன்று

ஜன்னல்களை திறந்து வை.
ஒரு விசும்பல் சத்தத்தில் 
உனது வெறுப்பை 
உணர்ந்து கொள்வேன். 
உனது சிரிப்பின் வாசனையில் 
விருப்பம் தெரிந்து கொள்வேன். 
பதில்கள் எப்போதும் சொற்களால்தான் 
நிரப்பப்பட வேண்டுமென்பதில்லை.